பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடை தொடர்கிறது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் (என்எஸ்எஃப்), இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டுக்கான தடையை விளையாட்டுத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட தொடர்களுக்கான தடை நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் இந்தியா பங்கேற்காது.
அதேபோல் இந்தியாவில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் பாகிஸ்தான் அணிகள் வந்து பங்கேற்பதையும் விளையாட்டு அமைச்சகம் அனுமதிக்காது. அதே நேரத்தில் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையோ அல்லது பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளையோ நடத்தும்போது அந்தப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அணி, தனிப்பட்ட வீரர்கள் பங்கேற்பர்.
மேலும், இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அணிகளைச் சேர்ந்த மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், உடலியக்க நிபுணர்கள், சர்வதேச விளையாட்டு நிர்வாக அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோருக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவை ஒரு விருப்பத்துக்குரிய விளையாட்டு மையமாக நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் முன்னெடுத்துள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது அதில் பாகிஸ்தான் பங்கேற்றால் அந்தப் போட்டியில் இந்திய அணியோ, தனிப்பட்ட வீரர்களோ பங்கேற்கத் தடை இல்லை. அதேபோல் இந்தியா நடத்தும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியோ, தனிப்பட்ட வீரர்களோ பங்கேற்கத் தடை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















