சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் இன்று (ஜன.14) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் வீட்டில் இருந்த தேவையற்ற பழைய பொருட்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
நேற்று காலை பனிப்பொழிவு இருந்த போதிலும் சிறுவர்கள் ஒவ்வொரு தெருவிலும் குப்பைகளை எரித்தனர். இதனால்,சென்னையில் பல்வேறு பகுதிகளில் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. இதனால், போகி கழிவுகள், குப்பைகளை எரித்ததன் விளைவாக எழுந்த புகை பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காற்றின் மாசு குறைவாக பதிவானது.