தென்மேற்கு பருவக்காற்று தீவிரத்தால் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை

0
14

தென்மேற்கு பருவக்காற்று அதிவேகமாக வீசி வருவதால், தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் 13 ஆயிரம் காற்றாலைகள், அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கூடங்குளம். ராதாபுரம், காவல்கிணறு, பழவூர். இருக்கன்துறை, பணகுடி, வடக்கன்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மட்டும் ஆயிரக் கணக்கான காற்றாலைகள் செயல்படுகின்றன. இப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

‘கிரிட் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 109.32 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே ஒரு நாளில் 50.09 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்த ஆந்திர பிரதேசத்தையும், 47.93 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்த கர்நாடகாவையும் பின்னுக்கு தள்ளி தமிழகம் தென் மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த காற்றாலை உற்பத்தி திறன் 9,495 மெகாவாட். இதில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 5,834 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களிலும் 3,700 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது.

கடந்த 2 நாட்களாக காவல்கிணறு, பணகுடி பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்கள் மற்றும் புறவழிச் சாலைகளில் அனைத்து ரக வாகனங்களும் மெதுவாக செல்ல நேரிட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here