திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியான உடனேயே கட்சித் தொண்டர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்து, அதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவில் 38 பேர் இடம்பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் பயணித்த இவர்கள், ஆராய்ந்து அறிக்கைகளை தயாரித்து என்னிடம் வழங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவருமே திமுகவின் மறுசீரமைப்பையே வலியுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், இ.பரந்தாமன், எழிலன் மற்றும் எஸ்.கே.பி.கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவானது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயும். மேலும், தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்கான நிரந்தர அமைப்பு மற்றும் தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்தும் தனது பரிந்துரைகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கும். அதன்பின், திமுகவின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.















