வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த ‘விடுதலை பாகம் 2’ படத்தை கடுமையாக சாடிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு பதிலடி தரும் வகையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் கருத்துப் பதிந்துள்ளார்.
இந்து மக்கள் மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் ‘விடுதலை பாகம் 2’ படம் குறித்து வெளியிட்ட பதிவில், “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது ‘உபா’ பாய வேண்டும். முக்கியமாக. அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீதும், ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இந்தத் திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த வேண்டும்.
காவல் துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கவுரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குநர். திரையரங்கை பிரசார மேடையாக மாற்றி, தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுன் சம்பத்தின் அந்தப் பதிவை பகிர்ந்து கருத்துப் பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், “நம்முடைய கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால நிதர்சன நிலையையும் எடுத்துச் சொல்லும் கிளாஸிக் திரைப்படம்தான் ‘விடுதலை பாகம் 2’. தயவுசெய்து வளருங்கள்; ஒரு படத்தை கலை வடிவமாகப் பாருங்கள்” என்று பதிலடி தந்துள்ளார்.
இதனிடையே, விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்து வரும் ‘விடுதலை பாகம் 2’ படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.