தமிழக காவல் துறை​யில் புதிதாக தேர்வான போலீஸாருக்கு அடிப்படை பயிற்சி தொடக்கம்: டிஜிபி ஆய்வு

0
32

தமிழக காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸாருக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் 2,665 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி வழங்கினார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸாருக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் நேற்று (4ம் தேதி) பயிற்சி தொடங்கியது. இவர்களுக்கு அடிப்படை பயிற்சியாக வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் சம்பந்தமான பயிற்சி அளிக்கப்படும்.

வெளிப்புற செயல்பாடுகளில் உடற்பயிற்சி, கவாத்து அணிவகுப்பு, துப்பாக்கிச் சூடு, கமாண்டோ பயிற்சி, ஜங்கிள் பயிற்சி போன்றவை அளிக்கப்படும். மேலும் உட்புற செயல்பாடுகளில் சட்டம், கைரேகை, முதலுதவி, அறிவியல் சார்ந்த புலனாய்வு, உளவியல், வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் வாழ்க்கை சமநிலை போன்றவையும் ஒன்றன்பின் ஒன்றாக கற்பிக்கப்படும்.

முன்னதாக கடந்த 2-ம் தேதி இந்த பயிற்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து காவல் துறை பயிற்சி பிரிவு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் (3ம் தேதி) சேலம் காவல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கே மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதுஒருபுறம் இருக்க புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸாருக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி கடந்த நவ.25 முதல் 30 வரை முதல் முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here