தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தாண்டி பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த கே. சூர்ய பிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், `பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்தாண்டு கோவை செல்வபுரத்தில் மாடுகள் வெட்ட தனியாக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக புகார் அளித்ததால் போலீஸார் அங்கு வந்து 7 மாடுகளை மீட்டனர். இந்தாண்டும் பக்ரீத் பண்டிகை மே 28 (இன்று) கொண்டாடப்படவுள்ள சூழலில் கோவையில் துடியலூர் சந்தை, உக்கடம், ரத்தினபுரி மசூதி, செல்வபுரம், குனியமுத்தூர், போத்தனூர் போன்ற பல்வேறு இடங்களில் மாடுகள் வெட்டப்படவுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தாண்டி பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்றும், மாடுகளை வெட்டும் முன்பாக அவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்றும், கன்றுக்குட்டிகள் வெட்டப்படுகின்றனவா என்றும் சோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சேஷாத்ரியும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு பொதுஇடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என தடை விதித்துள்ளது. 1976-ம் ஆண்டு தமிழக அரசும் பசுவதையை தடை செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட எந்தவொரு விலங்கினங்களையும் வெட்டக்கூடாது. அவ்வாறு பொதுஇடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலரும், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும்,என தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.















