விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? – பாஜகவுடன் பேச்சுவார்த்தை

0
68

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமக, கூட்டணியில் உள்ள பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த புகழேந்தி. மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். ஏப்ரல் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா என்பவரை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது

அதிமுகவும் தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கவுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள நாம் தமிழர் கட்சி, மைக் சின்னத்திலேயே போட்டியிடுவதா அல்லது கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெறுவதா என ஆலோசனை நடத்தி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால், அத்தொகுதியில் போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. அதேநேரம், பாஜகவும் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இருகட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பதால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “வழக்கமாக பாமக இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி அதிகமுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வியில் இருந்து வெளியே வருவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதனால், விக்கிரவாண்டி தொகுதியில் பாமக கண்டிப்பாக போட்டியிடும்” என்றனர்.