இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் நடுவர் அலீம் தாரை உள்ளடக்கிய தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 30, 2-வது இன்னிங்ஸில் 5 ரன்களை மட்டுமே பாபர் அஸம் எடுத்திருந்தார். பேட்டிங்குக்கு ஆடுகளம் சாதகமாக இருந்தபோதிலும் ரன் குவிக்க பாபர் அஸம் திணறினார். இதனால்தான் அவர் 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.