ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார் சஞ்சு சாம்சன். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. கேமரூன் கிரீன் வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி விரட்ட 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.
மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துகளில், 7 ரன்கள் எடுத்த நிலையில் அனுகுல் ராய் சுழற்பந்து வீச்சில் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது டீப் விக்கெட் திசையில் நின்ற ரோவ்மன் பவலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஜோடி 2.2 ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மட்டையை சுழற்றினார்.
கேமரூன் கிரீன் வீசிய 4-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட்டன. ஆயுஷ் மாத்ரேவின் அதிரடியால் சிஎஸ்கே அணி 4 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. அனுகுல்ராய் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசினார். வைபவ் அரோரா வீசிய 6-வது ஓவரில் முதல் 3 பந்துகளையும் ஆயுஷ் மாத்ரே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தை அரோரா ஷாட் பாலாக வீச அதை ஆயுஷ் மாத்ரே டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் ஆனது.
17 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் மாத்ரே 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன் ஜோடி 22 பந்துகளில், 47 ரன்கள் விளாசியது. பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 72 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ், சுனில் நரேன் வீசிய 7-வது ஓவரின் கடைசி பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் பேக்வேர்டு பாயின்ட் திசையில் பவுண்டரி அடித்தார். சுனில் நரேன் வீசிய 9-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கார்த்திக் தியாகி வீசிய 10-வது ஓவரின் 5-வது பந்தை சஞ்சு சாம்சன் பாயின்ட் திசையில் அற்புதமாக சிக்ஸர் அடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய 11-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே வழங்கினார். தொடர்ந்து கார்த்திக் தியாகி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் அடுத்த பந்தில் போல்டானார். 32 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி 32 பந்துகளில், 39 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய சர்ஃபராஸ் கான், கார்த்திக் தியாகி வீசிய பந்தில் டீப் பாயின்ட் திசையில் பவுண்டரி அடித்தார். 13-வது ஓவரை வீசிய சுனில் நரேன் வெறும் 3 ரன்களை மட்டுமே வழங்கினார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சர்ஃபராஸ் கான் ஒரு சிக்ஸரையும், டெவால்ட் பிரேவிஸ் 2 பவுண்டரிகளையும் அடித்தனர். அனுகுல் ராய் வீசிய அடுத்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. வைபவ் அரோரா வீசிய 16-வது ஓவரில் டெவால்ட் பிரேவிஸ் தலா ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் விரட்ட, சர்ஃபராஸ் கான் பேக்வேர்டு
ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டன. சீராக ரன்கள் சேர்த்த சஃர்பராஸ் கான் 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் போல்டானார். 4-வது விக்கெட்டுக்கு சர்ஃபராஸ் கான், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி 29 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஷிவம் துபே களமிங்கினார். சற்று அதிரடி காட்டிய டெவால்ட் பிரேவிஸ் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் கார்த்திக் தியாகி வீசிய வைடு யார்க்கரை அடித்த போது ஷார்ட் தேர்டு திசையில் நின்ற வைபவ் அரோராவிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷிவம் துபே 12 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்களும், ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும் சேர்க்க 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்களை வீழ்த்தினார். வைபவ் அரோரா, அனுகுல் ராய், சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். சிஎஸ்கே அணியின் ரன் குவிப்பை நடு ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களில் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். சுனில் நரேன் 4 ஓவர்களை வீசி 21 ரன்களையும், அனுகுல் ராய் 3 ஓவர்களை வீசி 21 ரன்களையும், வருண் சக்ரவர்த்தி 3 ஓவர்களை வீசி 26 ரன்களையும் மட்டுமே வழங்கினர். இவர்கள் கூட்டாக 10 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
193 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. ஃபின் ஆலன் ஒரு ரன்னில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் சிலிப் திசையில் குர்ஜப்னீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அங்ரிஷ் ரகுவன்ஷி 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அகீல் ஹோசைன் பந்தை விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே டெவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் ஆனது. 11-வது ஓவரை வீசிய நூர் அகமது அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். சீராக ரன்கள் சேர்த்த அஜிங்க்ய ரஹானே 22 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது வீசிய 5-வது பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் தூக்கி அடித்த போது ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன், போல்டானார். இந்த இரு விக்கெட்களும் சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையை கொடுத்தன. இதன் பின்னர் ரன்கள் சேர்க்க தடுமாறிய ரிங்கு சிங் 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது ஷிவம் துபேவிடம் கேட்ச் ஆனது. அப்போது ஸ்கோர் 12.5 ஓவர்களில் 90 ஆக இருந்தது.
இதையடுத்து ரமன்தீப் சிங், ரோவ்மன் பவலுடன் இணைந்தார். ஜேமி ஓவர்டன் வீசிய 14-வது ஓவரில் ரோவ்மன் பவல் சிக்ஸர் விளாசினார். கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 73 ரன்கள் தேவையாக இருந்தன. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. அன்ஷுல் கம்போஜ் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஜேமி ஓவர்டன் வீசிய 19-வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி ஓவரில் 45 ரன்கள் தேவையாக இருந்தன. இது சாத்தியம் இல்லை என்பதால் சிஎஸ்கே அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அன்ஷுல் கம்போஜ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடுத்த ரமன்தீப் சிங் 3-வது பந்தில் சர்பராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ரமன்தீப் சிங் 23 பந்துகளில், 35 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரோவ்மன் பவல் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்களும், அனுகுல் ராய் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்களையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அகீல் ஹோசைன், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி நடப்பு சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
தப்பித்த பிரேவிஸ்
சுனில் நரேன் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை டெவால்ட் பிரேவிஸ் தூக்கி அடித்த போது உயரமாக லாங் ஆஃப் திசையை நோக்கி சென்றது. அப்போது பந்தை கேட்ச் செய்ய கவர் திசையில் இருந்து அஜிங்க்ய ரஹானே விரைந்து சென்றார். அவருடன் மேலும் 3 வீரர்கள் வேகமாக ஓடினர். ஆனால் பந்து அவர்களுக்கு மத்தியில் விழுந்தது. இதனால் டெவால்ட் பிரேவிஸ் தப்பித்தார். அப்போது டெவால்ட் பிரேவிஸ் 9 ரன்களில் இருந்தார்.
33 ஆயிரம் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தி சிஎஸ்கே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிய காண சுமார் 33, 241 ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.
சி.டி. கோபிநாத்துக்கு இரங்கல்
ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, மறைந்த இந்திய முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத்துக்கு இரங்கல் செலுத்தும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் கருப்புப் பட்டையை அணிந்து விளையாடினார்கள்.
‘தப்பித்த நரேன் சிக்கினார்’
கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரேன் 18 ரன்களில் இருந்த போது மிட் ஆஃப் திசையில் எளிதாக கொடுத்த கேட்ச்சை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தவறவிட்டார். அன்ஷுல் கம்போஜ் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் இது நிகழ்ந்தது. எனினும் இந்த வாய்ப்பை சுனில் நரேன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலீல் அகமது வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
அரை சதம் இல்லாமல்..
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் கூட 50 ரன்களைக் கடக்காமல், சிஎஸ்கே அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 2012-ல் விசாகப்பட்டினத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.














