இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், கடந்த 2018-ல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் என்று அறிவித்த நிலையில், 2019, 2022 ஆசிரியர் தகுதித் தேர்வை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆக.11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, நியமன தேர்வுக்கு தயாராகி வந்த பி.எட். ஆசிரியர்கள், தங்களின் அரசுப் பணி ஆசிரியர் கனவு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் பி.எட் படித்தபட்டதாரிகள் ஆசிரியரே ஆக முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “பி.எட் படிப்பையும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியாக அறிவிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுத தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட் பட்டதாரிகளை அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடர வேண்டும்”என்று வலியுறுத்தினர்.