தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்

0
316

இது வெறும் அரசியல் வெற்றியை முன்வைக்கும் தேர்தல் அல்ல. தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் அமைத்தலுக்கான பணிகளை அதற்கென அமைக்கப்பட்ட குழுக்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, மண்டலவாரியாக வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், தொழில்பிரிவினர் என பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது.

அந்த வகையில், இக்குழுவினர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்டனர். நாளை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமும் தொடர்ந்து, மார்ச் 2-ம் தேதி தஞ்சையிலும், விழுப்புரத்திலும் கருத்து கேட்கின்றனர்.

இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகள், கருத்துகளை கேட்டறிந்து, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு: இதை ஏற்று, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை என பல்வேறு பகுதிகளுக்கு சென்று, விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்தோம். அவர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து, தலைவரிடம் ஒப்புதல் பெற்று, அறிக்கை தயாரிக்க உள்ளோம்.

சுயமரியாதை, கருத்துரிமை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. வெறும் அரசியல் வெற்றியை முன்வைக்கக் கூடிய தேர்தல் அல்ல. இந்நாடு எல்லோருக்குமான நாடாக, அனைத்து மாநிலங்கள், மொழிகளை ஏற்று மதிக்கும் நாடாக இருக்க வேண்டும்.

மாநில உரிமைகளை மதிக்கும் அரசை உருவாக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். மத்திய பாஜக மாநில உரிமைகள், மனிதனின் சுயமரியாதை,கருத்துரிமை ஆகியவற்றை சீரழித்து வரும் சூழல் உள்ளது. விவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி என்ற குழப்பம் மிகுந்த வரியின் மூலம் வணிகர்கள், தொழில்முனைவோர் தொழில் செய்ய முடியாத நிலை என அனைத்து தரப்பு மக்களையும் வதைக்கும் சட்டங்களை பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

முதல்வரின் தலைமையில்.. இதனால் வரும் தேர்தலில் மக்களை மதிக்கும் அரசு அமைய வேண்டும். தமிழ் மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும்.இது முதல்வரின் தலைமையில், ஒருங்கிணைப்பில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவணிகர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலாளர் சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாணவர் அமைப்புகளிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைககளை பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here