73 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கராச்சி பேக்கரி மீது தாக்குதல்

0
85

ஹைதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி கடையின் பெயரை மாற்றக்கோரி சிலர் இந்திய கொடிகளை ஏந்தி அக்கடையின் பெயர் பலகையை அடித்து துவம்சம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டு தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் திடீரென கராச்சி பேக்கரிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். மேலும், கடையின் பெயர் பலகை மீது கற்கள் எரிந்தும் நாசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீரென பதற்றம் நிலவியது.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். ஹைதராபாத் நகரின் சம்ஷாபாத் பகுதியில், கடந்த 73 ஆண்டுகளாக இந்த புகழ்பெற்ற கராச்சி பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதனை ராஜேஷ் மற்றும் ஹரீஷ் ராமாநானி என்பவர்கள் தற்போது நிர்வகித்து வருகின்றனர்.

தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் ராஜேஷ், ஹரீஷ் ஆகியோர் கூறியதாவது: இங்கு 100 சதவீதம் இந்தியன் பிராண்ட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்களின் தாத்தாவான கான்சந்த் ராமாநானிதான் நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கராச்சியில் இருந்து இந்தியா வந்தார். அவர்தான் இந்த கராச்சி பேக்கரியை நிறுவினார்.

அப்போது முதல் அதே பெயரில் இந்த பேக்கரியை நடத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையிட்டு எங்களுக்கும், எங்கள் கடைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2019-ல், புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரருவிலுள்ள இந்திரா நகர் கிளை கராச்சி பேக்கரியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹைதராபாத்தில் கராச்சி பேக்கரியின் பெயரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் அக்கடையின் பெயர்ப்பலகை மீது கற்களை ஏரிந்து நாசம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here