அறிமுக இயக்குநர் இரா.கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ படத்தில், கூத்துப்பட்டறை கலைஞர் அஜித்குமார், யுவ, விஜய் சூரன், காஞ்சனா செந்தில், டி.பன்னீர்செல்வம், சரவண சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்தார்த் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தைத் தமிழரசன் காளிதாஸின் லேப்ரிந்த் நேரடிவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னை ரெட் ஹில்ஸில் நடக்கும் கதையை கொண்ட இப்படம், விளிம்புநிலை மனிதர்களின் அன்றாட சண்டைச் சச்சரவுகளையும் குடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையும் எந்தவிதமான புனிதப்படுத்தலும் இன்றி முழு வீரியத்துடனும் உண்மையுடனும் பேசுகிறது.
பெர்லின் சர்வதேசப் பட விழாவில் பிப்ரவரியில் திரையிடப்பட்ட இப்படம் பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்து தர்மசாலாவில் இம்மாத இறுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறது. இதற்கிடையே, ஆசியாவின் ஆஸ்கர் எனப்படும் ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்டு இப்படத்தின் இயக்குநருக்கு கிடைத்துள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான இவ்விருதை அக்.30-ல் நடக்கும் விழாவில் இயக்குநர் இரா.கவுதம் பெற்றுக்கொள்கிறார்.
இதுபற்றி இயக்குநர் கவுதம் கூறும்போது, “இவ்விருது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் சில பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு திரையரங்கில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.














