விமானப்படை பயன்பாட்டுக்காக குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா – ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்திய விமானப்படையில் வீரர்கள் மற்றும் சரக்கு போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆவ்ரோ -748 விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதில் 70 வீரர்கள் பயணிக்கலாம், ராணுவத் தளவாட பொருட்களையும் எடுத்துச் செல்லலாம். குறுகிய ஓடுதளத்தில் இந்த விமானம் மேலே எழும்பும். விமானப்படை பயன்பாட்டுக்கு 56 சி-295 ரக விமானங்களை கொள்முதல் செய்ய ஸ்பெயின் நாட்டுடன் ரூ,21,935 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து வாங்கப்படும். மீதம் உள்ள 40 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் டாடா – ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கின்றன. இந்த மையத்தை பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த மையத்தில் தயாரான முதல் சி-295 ரக விமானம் தற்போது பரிசோதனைக்கு தயாராக உள்ளது. இந்த விமானத்தின் வடிவமைப்பில் 85 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டில் நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 13,000-க்கும் மேற்பட்ட பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 37 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் விமான தயாரிப்புக்கு தேவையான பாகங்களை விநியோகித்துள்ளன.
இங்கு தயாரான முதல் விமானத்தை இந்திய விமானப் படையின் துணை தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி சமீபத்தில் பார்வையிட்டார். இந்த விமானம் முதல் பறக்கும் சோதனைக்கு தயாராகி வருகிறது.















