பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 11,500 பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இரு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உறுதிபட கூறி வருகின்றனர். இதற்காக பூத் வாரியாக தீவிரவாக பணியாற்ற பாஜக தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுரை வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் பூத்துகள் உள்ளன. ஒரு மக்களவைத் தொகுதியில் 1,900 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் பாஜக தொண்டர்கள் 370 வாக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்குச் சாவடியில் 7 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு கூடுதலாக கிடைக்கும்.
நாடு முழுவதையும் கணக்கிட்டால் பாஜகவுக்கு கூடுதலாக 38 கோடி வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம் பாஜக தனித்து 370 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 161 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த பாஜக தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. 161 தொகுதிகளில் குறைந்தபட்சம் 67 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பாஜக செயற்குழுவின் முதல்நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 5 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி நடைபெற்றது. தற்போது 17 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் 12 மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி நடத்துகிறது.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. பாஜக ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோயில் உட்பட பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
தென் மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்று சிலர் கூறுகின்றனர். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு 29 மக்களவை எம்பிக்களும் 8 மாநிலங்களவை எம்பிக்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு 28 மக்களவை எம்பி, 7 மாநிலங்களவை எம்.பி.க் கள் மட்டுமே உள்ளனர். நாடு முழுவதும் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது.