பெப்சி அலுவலகத்தில் நடிகை சோனா தர்ணா

0
38

நடிகை சோனா, தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடரை இயக்கியுள்ளார். ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக உள்ள இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் பல அவமானங்களைச் சந்தித்ததாகவும் சோனா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வெப் தொடரின் ஹார்ட் டிஸ்க்கை சங்கர் என்ற மேலாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளன (பெப்சி) அலுவலகத்தின் முன் நடிகை சோனா, தர்ணாவில் நேற்று ஈடுபட்டார்.

அவர் கூறும்போது, “சினிமாவில் 25 வருடமாக இருக்கிறேன். ஆனால், 10 வருடமாக என்னை வேலை செய்ய விடவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், ஒரு ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்து, ‘ஸ்மோக்’ என்ற வெப் தொடரை இயக்குவதற்காகப் பூஜை போட்ட நாளில் இருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சங்கர் என்ற மானேஜரை வைத்திருந்தோம். அவர், படப்பிடிப்பில் பணியாற்றியவர்களுக்கான 5 நாள் சம்பளத்தை என்னிடம் வாங்கிவிட்டு, அவர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். பின்னர் வெப் தொடர் படப்பிடிப்புக் காட்சிகளைக் கொண்ட இரண்டு ஹார்ட் டிஸ்க்குகளை, கேமரா யூனிட் ஆட்களிடம் கொடுத்துவிட்டார். இதுபற்றி பெப்சி மற்றும் மானேஜர் யூனியனில் புகார் கொடுத்தேன். முதலில் பேசி தீர்வு காண்கிறோம் என்றவர்கள் பிறகு, ‘ஆமாம். அவர் ஏமாற்றிவிட்டார். ஆனால், அவர் தரமாட்டார்’ என்றார்கள்.

இது என்ன நியாயம்? என்று தெரியவில்லை. ஒரு வழியாக வெப் தொடரை முடித்துவிட்டு வந்து அந்த ஹார்ட் டிஸ்க்கை மீண்டும் கேட்டால் தர மறுத்து கேவலமாகப் பேசுகிறார்கள். அவர் ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்தும் எல்லோரும் அவருக்கு ஆதரவாகவே பேசுவது ஏன் என்று தெரியவில்லை. இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியாததால் பெப்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here