புதுச்சேரியைச் சேர்ந்த சி.செல்வராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தையின் இந்து மதத்தின் அடிப்படையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கும்படி கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்காக மதம் மாறுபவர்களுக்கு இதுபோல சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை
யீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு: ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மாறுவது என்பது அதன் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மதமாற்றத்தின் நோக்கம் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதுதானேயன்றி, பிற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்தால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இதுபோன்ற மறைமுக நோக்கங்கள் இடஒதுக்கீட்டு கொள்கையையே கேலிக்கூத்தாக்கிவிடும். மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும்போது, அரசு வேலைவாய்ப்புக்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்த முற்படுவதை ஏற்க முடியாது. மேலும் அது அரசியலமைப்பு சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம். எனவே, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.