உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் கீழ் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
முதல்கட்ட பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடைபெற்றது. அப்போது 130 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை காங்கிரஸ் வழங்கியது. ஆனால் அக்கட்சிக்கு வெறும் 26 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனிடையே, சமாஜ்வாதி கட்சி நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரு கூட்டணி தனது வேட்பாளர்களை அறிவித்த பிறகு, மற்ற கூட்டணிக்கு இடங்களை விட்டுக்கொடுத்தால், அது கூட்டணியே அல்ல. வேறு என்ன சொல்வது? நீங்கள் (சமாஜ்வாதி) பட்டியலை வெளியிடுகிறீர்கள். பிறகு இடங்களை விட்டுக்கொடுக்கிறீர்கள். நாங்கள் கூட்டணி கட்சியா அல்லது உங்கள் அடிமையாட்களா? சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக தனது வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறது என்றால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அர்த்தமில்லை” என்றார்.














