ட்ரம்ப் அரசின் மூத்த அதிகாரிகளை கொல்ல சதி: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கையும் ஈரான் மறுப்பும்

0
18

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை வாஷிங்டன் டி.சி.யில் வைத்து ரசாயன ஆயுதங்கள் அல்லது கதிரியக்க ‘டர்ட்டி பாம்ப்’ வெடிகுண்டுகளைக் கொண்டு கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

குறிப்பிட்ட இலக்குகளை அடையாளம் கண்டு இந்தத் தாக்குதலுக்கான அவசரகாலத் திட்டங்களை ஈரான் வகுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடித் தாக்குதல் நடப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது இல்லை என்றாலும், ஈரானிடம் இத்தகைய தாக்குதலை நடத்தும் செயல்பாட்டுத் திறன் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் உயர்மட்டப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவதுடன், முக்கிய அதிகாரிகளுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தவும் ஈரான் பரிசீலித்து வருவதாக உளவுத்துறை அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. இதற்கான தற்காப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம் இறங்கியுள்ளது.

இதற்கிடையில், உள்நாட்டுக்கு தற்போது நம்பத்தகுந்த உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம், ஈரான் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய் என மறுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here