மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளின் மேற்பரப்பை அகழ்ந்தெடுக்காமல் புதிய தார் சாலைகளை அமைத்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடியில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார்.
முதற்கட்டமாக ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக ரூ.130.19 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் முடிவுற்று சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது தரமாகவும், அளவீடுகள் சரியாகவும் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, தார்ச்சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேற்பரப்பின் பழைய தார் அடுக்கை முழுவதும் அகழ்ந்தெடுத்து, புதிதாக தார்ச் சாலைகளை அமைக்க வேண்டும்.
சாலையில் புதிதாக எவ்வளவு கனத்தில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறதோ அதே அளவுக்கு அகழ்ந்தெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் ஏற்கனவே சாலை எந்த அளவு உயரமாக உள்ளதோ புதிய தார்ச்சாலை அமைத்த பிறகும் அதே உயரம் பராமரிக்கப்படும்.
சிறப்பு இயந்திரத்தால் அகழ்ந்தெடுக்க முடியாத ஓரப் பகுதிகளில் வேறு இயந்திரங்கள் அல்லது பணியாளர்களால் நேரடியாக அகற்றப்பட வேண்டும். இதனால் கட்டிடங்கள் சாலை மட்டத்திற்கு கீழ் செல்வதை தவிர்க்க முடியும்.
பழைய சாலைகளில் சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளாமல் புதிய தார்ச் சாலை அமைத்தால், பணி மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














