ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கோடாரியால் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹமாமியின் கைகளை பயணிகள் சிலர் கட்டிப் போட்டுள்ளனர். இது தொடர்பான ஒரு வீடியோவை இஸ்ரேலைச் சேர்ந்த i24NEWS என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், விமானத்துக்குள் இருக்கும் துணை பைலட் அல்-ஹமாமியின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் முழங்காலிட்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவரது உடைகளில் ரத்தக் கரைகள் உள்ளன. 45 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பயணிகள் ‘போலீஸ் மட்டுமே’ என்று திரும்பத் திரும்பக் கூறுவது கேட்கிறது.
பயணிகளில் ஒருவர், ‘ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருந்து உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைக்கலாம்’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே, ஃபிளை துபாய் விமான ஊழியர்கள் அந்த துணை பைலட்டை விடுவிக்க வலியுறுத்தியதாக, 2 பயணிகள் ‘தி நியூயார்க் போஸ்ட்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அல்-ஹமாமியைக் கட்டுப்படுத்திய மூன்று பேரில் ஒருவரான வங்கி அதிகாரி திவிகா மானெஸ் கூறும்போது, “எந்தக் காரணமும் இல்லாமல், அந்த தீவிரவாதியின் கை கட்டை அவிழ்த்து விடுமாறு ஊழியர்கள் எங்களிடம் கூறிக் கொண்டிருந்தனர்” என்றார்.
காக்பிட்டுக்கு அருகில் 2-வது வரிசையில் அமர்ந்திருந்த ரியல் எஸ்டேட் நிபுணர் டேனியல் ஸ்லிச்டர் கூறும்போது, “விமான ஊழியர்கள் அந்த துணை பைலட்டை விடுவிக்கச் சொன்னார்கள். இதனால் எங்களுக்கு அவர்கள் மீது உடனடியாக சந்தேகம் எழுந்தது. பின்னர் நீங்கள் கடவுள் அல்ல, நீங்கள் அவரைக் கொல்லப் போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
அதற்கு நாங்கள் அவரைக் கொல்ல விரும்பவில்லை, அவர் எங்களைக் கொல்லக் கூடாது என்பதற்காகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் கட்டி வைத்துள்ளோம் என தெரிவித்தோம்” என்றார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, துணை பைலட்டை எந்தச் சூழ்நிலையிலும் விடுவிக்க மாட்டோம் என்று இஸ்ரேலிய பயணிகள் தெளிவாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
மேலும் பயணிகள் அவரவர் இருக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், காக்பிட் பகுதிக்கு அருகில் தங்களை தனியாக விடுமாறும் விமான ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், தாக்குதலில் விமானக் குழுவினருக்கும் தொடர்பு இருக்குமோ என்று அஞ்சிய இஸ்ரேலிய பயணிகள், அதற்குப் பதிலாக விமானத்தின் நடுப்பகுதியில் அமருமாறு அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.













