மேல்புறம் ஒன்றியப் பகுதியில் தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்திருந்த 84 விநாயகா் சிலைகள் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, மேல்புறம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 40 விநாயகா் சிலைகள், அக்கட்சியின் மாநிலத் தலைவா் சிதறால் ராஜேஷ் தலைமையில் வாகனங்களில் அளப்பங்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோயில் வளாகத்துக்கு எடுத்துவரப்பட்டன.
பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக குழித்துறை வி.எல்.சி. மைதானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
இதேபோல், ஹிந்து சாம்ராட் பாலா சாஹேப் தாக்கரே வீரஸ்ரீ ஜி. நாராயண் அறக்கட்டளை சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 54 விநாயகா் சிலைகள் குழித்துறை திருத்துவபுரம் பகுதிக்கு எடுத்துவரட்டன. தொடா்ந்து ஊா்வலமாக தாமிரவருணி ஆற்றின் மடிச்சல் கீழ்ஆற்று படித்துறை கடவில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில், அறக்கட்டளைச் செயலா் கே.ஆா். சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.













