இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.
தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000 பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.
ஜூலை மாதத்துக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பே மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும், பூமிக்கடியில் லாவா குழம்பு மற்றும் வாயுக்களின் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புவியியல் மையத்தின் தலைவர் லானா சாரியா எச்சரித்துள்ளார்.
எரிமலைச் சாம்பல் பாதிப்பு அதிகமாக உள்ள ஜகார்த்தா மற்றும் லம்பாங் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வகுப்புகள் இணையவழியில் மாற்றப்பட்டுள்ளன.
உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற போதிலும், மக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும், எரிமலையின் சுற்றளவிலிருந்து குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் இருக்குமாறு பொதுமக்களை பேரிடர் மேலாண்மை முகமை கேட்டுக்கொண்டுள்ளது.















