நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை 9ல் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று காலை, சிறையில் அவர் இறந்தார். அவரது உடல், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு திரண்ட, சபரி வர்மனின் உறவினர்கள், தென் தாமரைகுளம் போலீசார் தாக்கியதில் தான், சபரி வர்மன் உயிரிழந்ததாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின், அவர்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, அவர்கள் கலைந்தனர்.













