சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 28 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

0
19

தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள, ‘காலணித் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் ஜின்ஜியாங் நகரில் உள்ள ஒரு பிரபலமான காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 28 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தொழிற்சாலையின் உள்ளே 239 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலையின் தரைதளத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த காலணி தயாரிப்புப் பொருட்களிலிருந்து தீ பரவத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன பசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் தப்பிக்க வழியின்றி, கரும்புகைக்கு நடுவே சிக்கிய பல தொழிலாளர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 213 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும், முன்னதாக மாயமானதாக அறிவிக்கப்பட்ட 28 பேரும் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அங்கு பரவிய அடர்ந்த நச்சுப்புகை மற்றும் படிக்கட்டுகளில் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததால் மீட்புப் பணியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் விடுத்துள்ள உத்தரவில், மீட்புப் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட அறிவுறுத்தியதோடு, சமீபகாலமாக உற்பத்தி ஆலைகளில் தொடரும் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி, தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நிறுவனத்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியில் இன்னும் நச்சு வாயுவின் துர்நாற்றம் வீசுவதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here