ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி கடந்த வாரம் அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்திருந்தது. அயர்லாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்நிலையில் இருதரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்டம் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் இன்று இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது. அயர்லாந்து ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். 15 வயதாகும் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது விவாதப் பொருளாக மாறியிருந்தது. எனினும் இங்கிலாந்து தொடரிலும் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகமே. ஒருவேளை அவர், களமிறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் நீக்கப்படக்கூடும். சஞ்சு சாம்சன் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5 ரன்களும், 2 ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி இருந்தார். இஷான் கிஷன் இரு ஆட்டங்களையும் சேர்த்து 13 ரன்கள் எடுத்திருந்தார்.
அயர்லாந்து தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, அபிஷேக் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரிடம் இருந்து பெரிய அளவிலானமட்டை வீச்சு வெளிப்படவில்லை. கடைசி போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திலக் வர்மா தடுமாறினார். அவர், அரை சதம் அடித்த போதிலும் 46 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களே சேர்த்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவர்கள் கவனமுடன் செயல்படக்கூடும்.
இங்கிலாந்து அணி ஹாரி புரூக் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் ஹாரி புரூக்குடன் ஜாஸ் பட்லர், ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், வில் ஜேக்ஸ், பில் சால்ட், டாம் பேன்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ்டங், சாகிப் மஹ்மூத், சோனி பேக்கர், ஆதில் ரஷித், ரேஹான் அகமது ஆகியோரை உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு குழு அழுத்தம் கொடுக்கக்கூடும். இன்றைய போட்டி நடைபெறும் ரிவர்சைடு மைதானத்தில் இதற்கு முன்னர் சர்வதேச அளவில் 8 டி 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்த மைதானத்தின் சராசரி ரன் குவிப்பு 138 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 194 ஆக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கக்கூடும். எனவே ஆடுகளத்துக்கும் எதிரணியின் பந்துவீச்சு உத்திகளுக்கும் ஏற்பவும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களை மாற்றிக்கொண்டு பேட் செய்வது அவசியம். இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலை செய்கிறது.















