“ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” – ட்ரம்ப் திட்டவட்டம்

0
13

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். “பேச்சுவார்த்தைகள் முறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில் காலம் நமது பக்கமே உள்ளது. எனவே ஒப்பந்தத்தை நோக்கி அவசரப்பட வேண்டாம் என்று எனது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

இரு தரப்பும் போதிய நேரத்தை எடுத்துக்கொண்டு இதைச் சரியாகச் செய்ய வேண்டும், இதில் எந்தத் தவறுகளும் நடந்துவிடக் கூடாது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடனான ஈரானின் உறவு தற்போது மிகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கவோ அல்லது பெறவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகப் இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரூபியோ, “மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறப்பதிலும் வாஷிங்டன் கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

இன்னும் சில மணி நேரங்களில் உலகிற்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதுகுறித்த முக்கிய அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் வெளியிடலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்கள் போர்நிறுத்த நீட்டிப்புக்கான வரைவு உடன்படிக்கை தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றவும், அதற்குப் பதிலாக ஈரான் துறைமுகங்கள் மீது கடந்த ஏப்ரல் 13 முதல் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் தளர்த்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here