போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் லியோவுக்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது நுரையீரலில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக, போப் லியோ, கடந்த செவ்வாய்க்கிழமை ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை, சிக்கல்கள் ஏதுமின்றி நிறைவடைந்ததாகவும், போப் நலமாக இருப்பதாகவும் வாடிகன் முதலில் தெரிவித்தது.
பின்னர், மருத்துவமனையின் மார்பக அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரும், போப்பின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ஸ்டெஃபானோ மார்கரிட்டோரா அளித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டது.
அதில், 71 வயதான போப் லியோவுக்கு, நுரையீரல் புற்றுநோயின் ஒரு பொதுவான வகையான நுரையீரல் அடினோகார்சினோமா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், “அறுவை சிகிச்சைக்கு முன்பு சந்தேகிக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க, அறுவை சிகிச்சையின்போது திசு மாதிரிகளை விரைவாகப் பரிசோதித்ததில் போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் அதில் வழங்கப்படவில்லை. லியோ சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனவும், அக்டோபர் 20 வரை அவருடைய அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.














