தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே…
ஏ.ஸ்ரீநாத் – தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.கமலி – நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.கமலி, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்களில் இவரும் ஒருவர். இவருக்கு வயது 28. இவருக்கு கால்நடை வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சி.விஜயலட்சுமி: தமிழ வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் சி.விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியை வீழ்த்தினார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். சுயதொழில் செய்துவந்தார். இவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.வி.ரஞ்சித்குமார் – இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 50 வயதான இவர் வேளாண், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ராஜ்குமார் – கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ராஜ்குமாருக்கு வயது 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.மதன்ராஜா – தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ராஜேஷ் குமார் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார். இவர் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமைச்சராகப் பதவியேற்றபோது காமராஜ், ‘ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி’ என அவர் முழக்கமிட்டதை ஆளுநர் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எம்.விஜய் பாலாஜி, கடந்த காலங்களில் 2 இடைத்தேர்தல்களை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றில் வெற்றி பெறவில்லை. இவர் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவராவார். சொந்தத் தொழில் செய்கிறார். இவருக்கு நெசவு, கைத்தறித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் – ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுக மூத்த தலைவர், சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.தனபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்தினார்.
தவெகவில் இணையும் முன்னர் இவர் அதிமுகவில் இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் இவர் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரது தந்தை தனபால், தமிழக சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டமும், டெல்லி ஐஐபிஎம் மையத்தில் எம்பிஏவும் முடித்துள்ளார். இவருக்கு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பெ.விசுவநாதன் – மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விசுவநாதன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக அறிவித்த வேட்பாளர் இவர்தான்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே பட்டியலின வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2009 – 2014 காலக்கட்டத்தில் இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.குமார் – சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார் ஒரு தொழிலதிபர். அவர் பொறியியல் பயின்றுள்ளார். அண்மையில் ஐஐஎம் பெங்களூருவில் பிசினஸ் லீடர்ஷிப் பயின்றுள்ளார். இவருக்கு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.விக்னேஷ் – கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற கே.விக்னேஷுக்கு வயது 38. இவர் கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார். கோவை கிணத்துக்கடவு அதிமுக கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அவர் அங்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வி.சம்பத்குமார் – கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வி.சம்பத்குமார், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை வீழ்த்தி கவனம் பெற்றார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக எம்பிஏ முடித்துள்ளார். சுயதொழில் புரிந்துவருகிறார். இவருக்கு இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் – ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜீவ் ஒரு மருத்துவர். 33 வயதான இவர், தவெக இளம் எம்எல்ஏக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவருக்கு சுற்றுசூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வி.காந்திராஜ் – 52 வயதான இவர், அரக்கோணம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சிவில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். 12-ம் வகுப்பு வரையிலும் படித்துள்ளார். இவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெகதீஸ்வரி.கே – ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு வயது 40. இவர் ஒரு பட்டதாரி. பத்திரிகை துறை அனுபவம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு சமூக நலத் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விஜய் தமிழன் பார்த்திபன் ஏ – சேலம் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது வரை பயணித்த பலருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபனும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர். பழைய பேருந்து நிலையத்தில் சிறியதாக மொபைல் கடை ஒன்றை நடத்தி வந்தார். தீவிர விஜய் ரசிகராக இருந்தார். சேலம் மாவட்ட அளவில் விஜய் ரசிகர் மன்றத்தை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது பழைய பேருந்து நிலையம் அருகில் பெரிய மொபைல் ஷோரூம் ஒன்றை வைத்திருக்கிறார். விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர். ரமேஷ் – ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10-ம் வகுப்புவரை படித்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தவர் ஆவார். இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னரசு.கே – ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு 36 வயது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கமிஷன் ஏஜன்ட்டாக பணிபுரிவதாக தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
முகமது ஃபர்வாஸ்.ஜே – 31 வயதான இவர், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அச்சுத் தொழில் செய்துவந்தார். இவருக்கு தொழிலாளர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.சரத்குமார் – சென்னைக்கு அருகிலுள்ள முக்கியத் தொகுதியான தாம்பரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்எல்ஏ டி.சரத்குமார். இவர் எம்.எம்.ஜெயின் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்றார். முதன்முறையாகத் தேர்தலில் நின்று, திமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட தாம்பரத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். திமுகவின் ஆர்.எஸ்.கிருத்திகா தேவியை இவர் 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, இவர் கட்டுமானத் துறையில் சிவில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்தார். இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மரிய வில்சன் நிதியமைச்சர் ஆகியிருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவராக அறியப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன்தான் மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவரான இவர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.விக்னேஷ் – கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 38 வயதான இவர் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்ட்ம் பெற்றவர். இவர், மச்சாம்பாளையம் பகுதியில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், தவெக-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டியலின அமைச்சர்கள் 7 பேர்!
முதல்வர் விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகியோர் ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாவர்.
அதேபோல் விஜய்யின் அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எஸ்.கமலி, சி.விஜயலக்ஷ்மி, கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.















