கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினர். இதில், யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களின் கருத்துகளை அவர்கள் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மக்கான், “காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை நாங்கள் மே 7-ம் தேதி கூட்டினோம். ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் நாங்கள் தனித்தனியாகப் பேசினோம். கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தொடர்பான அவர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் கூறிய மற்ற கருத்துகளையும் நாங்கள் குறித்துக்கொண்டோம்.
இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கும் ஒருவரி தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து ஒருமனதாக நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தின் நகல் கட்சித் தலைவர் தலைமையிலான மேலிடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அறிக்கையையும் நாங்கள் மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளோம். காங்கிரஸ் மேலிடம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளிதரன், “முதல்வர் குறித்த ஆலோசனை 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதில், சீனியாரிட்டி மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்காது. அமைய இருப்பது கூட்டணி அரசு. எனவே, கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா, கே.சி.வேணுகோபால், சன்னி ஜோசப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில், வி.டி.சதீசனின் ஆதரவாளர்கள், அவரையே முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் பதாகைகளை வைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.















