இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வருகை தந்துள்ள வியட்நாம் அதிபர் டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான உயர்நிலை குழுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பான கூட்டறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுமே இந்தோ – பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்த வரை ஒரே மாதிரியான தொலைநோக்குப் பார்வையைத் கொண்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஏற்படவும் இரு நாடுகளும் தொடர்ந்து ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
சீனாவின் ஆதிக்கம்
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையிலான குழுக்கள் விரிவாக விவாதித்ததாகத் தெரிகிறது. சர்வதேச கடல் எல்லை விதிகளுக்கு உட்பட்டு இப்பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா – வியட்நாம் இடையே பொருளாதார ஒத்துழைப்பு, ராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. இது ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.















