ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறத்திலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் முடக்கியது. ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் சரக்கு, எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் ராணுவம் அனுமதி வழங்க மறுத்து வருகிறது. அமெரிக்கா, ஈரானின் ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கியிருக்கிறது.
ஈரான் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் வளைகுடா நாடுகளின் அனைத்து துறைமுகங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பெர்சிய வளைகுடா மற்றும் செங்கடலுக்கு நடுவே சவுதி அரேபியா அமைந்துள்ளது. தற்போது பெர்சிய வளைகுடாவின் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் செங்கடல் வழியாக சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகிறது.
ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சிப் படை ஈரானின் பினாமியாக செயல்படுகிறது. தற்போதைய சூழலில் ஈரானின் தூண்டுதலால் ஹவுத்தி கிளர்ச்சிப் படை செங்கடலில் அமைந்துள்ள பாப் அல் மண்டேப் ஜலசந்தியை மூடும் அபாயம் உள்ளது. அவ்வாறு மூடப்பட்டால் சவுதி அரேபியாவின் கடல் வழி போக்குவரத்து முழுமையாக முடங்கும். உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும்.
உரத் தட்டுப்பாடு..
மேலும் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படும். வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் மோசமடையும். எனவே ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் ஜர்னல் நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி உள்ளது.














