பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்’ நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே மருத்துவ சாதனத்தை பல நோயாளிகளுக்கு பயன்படுத்துதல் என பல்வேறு பாதுகாப்பற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே எச்ஐவி பரவலுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவுன்சாவில் 8 வயது சிறுவன் எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இறுதி நாட்களில், அவன் அனுபவித்த தீவிர துன்பத்தை சிறுவனின் தாயார் நினைவு கூர்ந்தார். சிறுவனுக்கு எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்ட சிறிது காலத்திலேயே, அவன் சகோதரி அஸ்மாவுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட அசுத்தமான ஊசிகள் மூலம் இரு குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் நம்புகின்றனர்.2024-ம் ஆண்டின் பிற்பகுதியில், உள்ளூர் மருத்துவர் குல் கைஸ் ரானி தனது மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளிடையே எச்ஐவி பாதிப்புகள் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்ததை கவனித்தபோது இந்த தொற்றுப் பரவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
பிபிசி நடத்திய புலனாய்வில் 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தவுன்சாவில் குறைந்தது 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தொற்றுகளில் பல பாதுகாப்பற்ற ஊசி போடும் முறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தங்கள் மீதான புகார்களை மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.














