மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களுடன் தங்களது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 10 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) இத்தகவலை தெரிவித்துள்ளது. மூர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவான ஜாஹிர் ஹொசைன் ரூ.67 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
2-வது இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவான அகமது ஜாவேத் கான் ரூ.32.3 கோடி சொத்துகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஜொரசங்கோ எம்எல்ஏவான விவேக் குப்தா ரூ.23.1 கோடி சொத்துகளுடன் இருக்கிறார்.
4-ம் இடத்தில் ஷிப்பூர் தொகுதி மனோஜ் திவாரி ரூ.20.3 கோடி சொத்துகளுடனும், 5-வது இடத்தில் சாகர்திகி தொகுதியைச் சேர்ந்த பைரோன் பிஸ்வாஸ் ரூ.20.1 கோடி சொத்துகளுடனும் உள்ளனர்.
பாரதீய கோர்க்கா பிரஜாதந்த்ரிக் மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ரூபன் சதா லேப்சா (கலிம்போங் தொகுதி) ரூ.18.2 கோடி சொத்துகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறார். 7-ம் இடத்தில் பிரதீப் மஜும்தார் (ரூ.18.1 கோடி), 8-ம் இடத்தில் நந்திதா சவுத்ரி(ரூ.15.7 கோடி), 9-ம் இடத்தில் அசோக் குமார் (ரூ.14.7 கோடி), 10-ம் இடத்தில் துலால் சந்திர தாஸ்(ரூ.13.7 கோடி) உள்ளனர்.














