ஜார்க்​கண்ட்: விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 39 ஆண்டு கால பழைய விமானம்

0
17

ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்​துக்​குள்​ளான ஏர் ஆம்​புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஜார்க்​கண்ட் ராஞ்​சி​யில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்​ர​வரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்​புலன்ஸ் விமானம் டெல்லி இந்​தி​ரா ​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்தை நோக்கி புறப்​பட்​டது.

இந்த விமானம் சத்ரா மாவட்​டத்​தில் உள்ள சிமாரியா காட்​டுப் பகுதி​யில் விபத்​துக்​குள்​ளாகி அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்​தனர். இந்த ஏர் ஆம்​புலன்ஸை விவேக் விகாஷ் பகத் என்ற விமானி இயக்​கி​னார். துணை விமானி​யாக இருந்​தவர் சவ்ராஜ் தீப் சிங்.

ரெட்​பேர்ட் ஏர்​வேஸ் இயக்​கிய இந்த பீச்​கி​ராப்ட் சி 90 ஏ விமானம் 1987-ல் தயாரிக்​கப்​பட்​டது. இது 6,610 மணி நேரம் பறந்திருந்தாலும், புள்​ளி​ விவரப்​படி இது அதி​க​மாகப் பயன்படுத்தப்​பட்ட விமானம் அல்ல என்று அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர். விமானத்துக்​கான தகு​திச் சான்​றிதழ் இந்த ஆண்டு ஜனவரி 21-ல் புதுப்​பிக்​கப்​பட்​டது என்​றும் அவர்​கள் தெரிவித்​தனர்.

கருப்பு பெட்டி இல்லை: விபத்​துக்​குள்​ளான ஏர் ஆம்​புலன்​ஸில் கருப்பு பெட்டி இருக்​க​வில்​லை. ஏனெனில் சிவில் விமான போக்குவரத்து விதி​களின்​படி, 5,700 கிலோவுக்​கும் குறை​வான எடை கொண்ட விமானங்​கள் ‘காக்​பிட் வாய்ஸ் ரெக்​கார்​டர்’ (CVR) அல்​லது ‘ஃப்​ளைட் டேட்டா ரெக்​கார்​டர்’ (FDR) எனப்​படும் கருப்பு பெட்​டியை வைத்​திருப்​பது கட்​டாயமல்ல.

விபத்​துக்​குள்​ளான இந்த விமானத்​தின் அதி​கபட்ச எடை 4,583 கிலோ மட்​டுமே என்பதால், அதில் இந்த கருவி​கள் பொருத்​தப்​பட​வில்​லை.

பிளாக் பாக்ஸ் இல்​லாத நிலை​யில், விமானப் போக்​கு​வரத்து கட்டுப்​பாட்டு அறை​யுட​னான உரை​யாடல்​கள், விமானத்​தின் சிதைந்த பாகங்​கள் மற்​றும் நேரில் பார்த்​தவர்​களின் சாட்சியங்களை வைத்து புல​னாய்வு அதி​காரி​கள் விசாரணையை மேற்​கொள்​வார்​கள்.

விமானத்​தில் இருந்த வானிலை ரேடாரில் ஏற்​பட்ட கோளாறு காரண​மாக வி​மானம் பாதையை மாற்​றியதா என்​பது குறித்​தும் வி​சா​ரணை நடத்தப்பட்டு வரு​வ​தாக அதி​காரி​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here