மாவோயிஸ்டு இயக்கத்தின் கமாண்டர் தேவுஜி மற்றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீஸில் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மாவோயிஸ்டு, நக்சல்களின் வன்முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான என்கவுன்ட்டர்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் அந்தந்த மாநிலங்களில் சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியாவை (மாவோயிஸ்டு) சேர்ந்த கமாண்டர் திப்பிரி திருப்பதி (எ) தேவுஜி (எ) தேவ்ஜி (62) போலீஸில் சரணடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மேலும் 20 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ”மாவோயிஸ்டு கமாண்டர் தேவுஜி எங்களிடம் தான் இருக்கிறார். அவர் சரணடைந்தது குறித்து ஒன்றிரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வோம்” என்று கூறியுள்ளனர்.
கடந்த 2025ம் ஆண்டு மாவோயிஸ்ட் மூத்த தலைவர் நம்பலா கேசவ ராவ் (எ) பசவராஜ் என்கவுன்ட்டரில் இறந்தார். அவருக்குப் பதில் தேவுஜி அந்தப் பொறுப்புக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்தத் தகவல்களை மாவோயிஸ்டு அமைப்பு மறுத்துள்ளது. சரணடைபவர்களுக்கு பல்வேறு மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.














