பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம், `தாய்மை செயலி’ திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு, மதிப்பீடு (PICME) தாய்மை செயலி செயல்பாட்டை தொடங்கினார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளில் 20 சதவீதம் 2 கிலோவுக்கும் கீழே குறைந்த எடை உள்ள குழந்தைகளாக உள்ளன. இப்போது 52,000 குழந்தைகள் எடை குறைவான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடர் கவனிப்புக்கும், இரும்புச் சத்து சொட்டு மருந்து, வைட்டமின் பி3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.8.07 கோடியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
‘தாய்மை செயலி’ என்கின்ற புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி தமிழகத்தில் தாய்சேய் நலச் சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாகும்.
கர்ப்பிணிகள் பதிவு செய்யப்படும் தளத்திலிருந்து பேறுகாலப் பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி, தடுப்பூசி போன்றவை இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படும். தாய்மை செயலியும் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளின் மரண விகிதமும், தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. 2021-22-ல் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தாய்மார்களின் இறப்பு என்பது 90.5 ஆக இருந்தது.
2022-23-ல் 52 ஆகவும், 2023-24-ல் 45.5 ஆகவும், 2024-25-ல் 39.5 ஆகவும் குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். குழந்தை மரண விகிதம் என்பது 1000 குழந்தைகள் பிறப்புக்கு 2021-22-ல் குழந்தை இறப்பு என்பது 10.4 அளவில் இருந்தது.
2022-23-ல் 10.2 ஆகவும், 2023-24-ல் 8.2 ஆகவும், 2024-25-ல் 7.7 ஆகவும் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை மரண விகிதத்தைக் குறைத்து பூஜ்ஜியம் நிலையை எட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.











