உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு கரன்சி வியாபாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் கரோனா காலத்தில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்ற போது ஆன்லைன் விளையாட்டை கற்றுக் கொண்டனர். நாளடைவில் இவர்கள் கொரியன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காலை தற்கொலை செய்ய முடிவு செய்தனர். “சாரி அப்பா’. கொரியாதான் எங்கள் வாழ்க்கை. அதை எங்களால் கைவிட முடியாது” என்ற குறிப்பு எழுதிவிட்டு இவர்கள் பூஜை அறைக்கு சென்று கதவை மூடியுள்ளனர். ஒரு நாற்காலி மீது ஏறி ஜன்னல் வழியாக ஒருவர்பின் ஒருவராகக் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.
இவர்கள் கீழே விழுந்த சத்தத்தை கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொரியன் லவ் கேம்: விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 சகோதரிகளும் ஆன்லைன் விளையாட்டு செயலி மூலம் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளையாட்டை தொடங்கும்போது சமூக ஊடகம் மூலமாக தொடர்பு கொள்ளும் நபர், விளையாடுபவர்களுடன் இனிமையாக பேச்சு கொடுப்பார். போட்டோக்களை பகிர்ந்து கொள்வார். பின்னர் கொரியா பொழுதுபோக்கு கலாச்சாரம், கொரியா நாடகங்கள் ஆகியவை உட்பட சிறிய இலக்குகளுடன் கூடிய போட்டியை நடத்துவார்.
இது நாளடைவில் கடினமான இலக்காக மாறும். இதை முடிக்கவில்லை என்றால், சவால்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கு இருக்கும் என மிரட்டல் விடுக்கப்படும். இதற்கு பயந்து சிறுவர்கள் அந்த விளையாட்டை தொடர்வர். இந்த விளையாட்டில் மொத்தம் 50 இலக்குகள் இருக்கும், இறுதி இலக்கு தற்கொலை சவாலில் முடியும் என கூறப்படுகிறது.
இந்த விளையாட்டில் மூழ்கி 3 சகோதரிகளும் தற்கொலை செய்திருப்பார்கள் என நம்பப்படுகிறது. இவர்களை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என பெற்றோர் தடுக்கும்போதெல்லாம் “கொரியாதான் எங்கள் வாழ்க்கை, கொரியாதான் எங்களுக்கு பிடிக்கும். நீங்கள் என்ன சொன்னாலும், கொரியா ஆன்லைன் விளையாட்டை கைவிட முடியாது” என சிறுமிகள் கூறியுள்ளனர்.
தற்கொலை தீர்வல்ல…
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ளவும்.



