மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வருந்தத்தக்க பட்ஜெட் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பட்ஜெட் சாதாரண மக்களை புறக்கணித்துள்ளது. பட்ஜெட்டின் விளைவால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் ஏன் திறக்கப்பட்டன? என்ற கேள்வியை விட பங்குகள் மேலும் எவ்வளவு வீழ்ச்சி அடையும் என்ற கேள்விதான் உண்மையில் எழுந்தது.
நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏழைகள், சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மேலும் பலவீனப்படுத்துவதாக பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் எந்த அர்த்தமுள்ள நிவாரணமும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், கடைக்காரர்கள் ஆகியோருக்கு கிடைக்கவில்லை. மொத்தத்தில் இது ஏமாற்றமளிக்கும் வருந்தத்தக்க பட்ஜெட்டாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



