சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காக பாக். ஏங்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

0
319

சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மதத்தை பற்றி கேட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்கு ஏங்குவார்கள். உணவு தேவைக்காக அந்த நாடு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கும்.

சிந்து நதி நீர் கால்வாய்கள் மூலம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகருக்கு கொண்டு செல்லப்படும். இதனால், அப்பகுதிகளில் பாசன வசதிகள் கணிசமான அளவில் அதிகரிக்கும். இதன் மூலம் வேளாண் துறை மிகுந்த பயனடையும். அதேநேரத்தில் பாகிஸ்தான் ஒவ்வொரு துளி நீருக்காகவும் ஏங்கும். பாஜக நிர்வாகிகள் பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து பேச வேண்டும். வீண் சர்ச்சைகளுக்கு ஆளாக கூடாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பஹல்காம் தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து விளக்கம் அளித்தவர் ராணுவ கர்னல் சோபியா குரேஷி.

சோபியா குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது அரசியல் ரீதியில் விவாதங்களை கிளப்பியது. பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில்தான், பாஜக நிர்வாகிகளை சிந்தித்து பேசுமாறு பயிற்சி கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here