பிஹாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலி: 30-க்கும் அதிகமானோர் காயம்

0
38

பிஹார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம், இந்நிலையில், நேற்றும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தால் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.ஆண்டுதோறும் நிகழும் நிகழ்வு எனத் தெரிந்தும் உள்ளூர் நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே உயிரிழப்பு நேர காரணம் என உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறினார். இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க தேசிய சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கூட்டத்தை சரியாக நிர்வகிக்கத் தவறிவிட்டனர் என்று விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலர் கூறினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்தக் குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.உ,பி, ம.பி., பிஹார்.. உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில், 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகினர். அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த ஒரு மத போதனை விழாவில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளதாகவே பிஹாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்ததுள்ளது. பிஹார் கோயில் நெரிசல் பலி மேலும் அதிகரிக்கலாம் என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here