விசாகப்பட்டினத்தில் உள்ள ‘லிட்டில் கார்டன்’ தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில், 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் காலை ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற பிரணய், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியையால் கண்டிக்கப்பட்டு அடிக்கப்பட்டார். பயத்திலும் அதிர்ச்சியிலும் கதறி அழுத சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே குப்புற மயங்கி விழுந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இணையத்தில் வெளியாகின.
உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பயத்தால் ஏற்பட்ட மாரடைப்பு அல்லது அதிர்ச்சியே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆந்திரப் பள்ளிக் கல்வித்துறை கடும் வருத்தம் தெரிவித்து, 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.















