இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிதானமாக விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆலி போப் 167 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசினார். பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் சேர்த்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளையர், கவேம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கியது. மிகைல் லூயிஸ் 21, கிர்க் மெக்கென்சி 11 ரன்களில் ஷோயிப் பஷிர்சுழலில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 72 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தநிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் ஷாட் லெக் திசையில் ஆலி போப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 53 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அத்தனாஸ் 70, கவேம் ஹாட்ஜ் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.