சொந்த மண்ணில் 13 டெஸ்டில் 19 விக்கெட்கள்: வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் தடுமாறுவது ஏன்?

0
55

நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை.

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில் முகமது சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 30 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ், இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 61 விக்கெட்கள் வெளிநாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) நடைபெற்ற 17 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதாகும்.

இதை தவிர்த்து உள்நாட்டில் முகமது சிராஜ் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 192.2 ஓவர்களை வீசி 19 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இது சொந்த மண்ணில் அவரது தடுமாற்றத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைக்கப்படுவது இல்லை என்ற கருத்து இருந்தாலும் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை மீறியும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

உள்நாட்டில் விளையாடி உள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் 4 ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இதில் இந்தூர், டெல்லியில் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் முகமது சிராஜ் கூட்டாக 16 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார்.

ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த 7 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில்அவருக்கு 12 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன, இது ஒரு போட்டிக்கு இரண்டு விக்கெட்களுக்கும் குறைவாகும். மேலும் புதிய பந்தில் தொடக்க ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்துவதிலும் தொடர்ச்சியான செயல் திறன் சிராஜிடம் இருந்து வெளிப்படாததும் பலவீனமாக உள்ளது.

இதற்கு காரணம் முகமது சிராஜ், இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப தனது பந்து வீச்சு நீளத்தை மாற்றிக் கொள்ளாததே காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்தியஅணியின் பந்து வீச்சாளர்களுடன் பணியாற்றிய பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது:

முகமது சிராஜின் சாதனையை நீங்கள் பார்த்தால், அவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிக பவுன்ஸ் உள்ள இடங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதை பார்க்க முடியும். பேட்ஸ்மேனிடம் இருந்து 6 முதல் 8 மீட்டர் நீளத்தில் பந்தை வீசுவதே டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற சிறந்த நீளமாக கருதப்படுகிறது. ஆனால் அது பவுன்ஸைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடும்.

ஆஸ்திரேலியாவில் பந்து வீச்சின் சிறந்த நீளம் 8 மீட்டர். இங்கிலாந்தில் இது 6 மீட்டராக உள்ளது.அதேவேளையில் குறைந்த பவுன்ஸ் கொண்ட இந்திய ஆடுகளங்களில் 6.5 மீட்டர் நீளமே சிறந்ததாக உள்ளது. 6.5 மீட்டர் தூரத்தில் பந்தை பிட்ச் செய்தால் அனைத்து வகையிலும் விக்கெட்களை எடுக்கலாம். முகமது சிராஜ் 8 மீட்டர் நீளத்தில் பந்து வீசுகிறார், இந்தியாவில் அந்த நீளத்தில் பந்து வீசினால் ஸ்டெம்பை தாக்க முடியாது.

வேகம் இல்லாத இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் 8 மீட்டர் நீளத்தில் பந்துகளை வீசினால் அதை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். பந்தின் லைனை அவர்கள் சரியாக கணித்து அடித்து விளையாட முடியும். நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெற உள்ள புனே மற்றும் மும்பை டெஸ்ட் போட்டிகளிலும் முகமது சிராஜ் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here