பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமியின் காலில் வீக்கம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
இதனால் அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஷமி விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர், முகமது ஷமி சுமார் ஒரு மணி நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். இதை இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் கவனித்தனர். தொடர்ந்து முகமது ஷமிக்கு சில பீல்டிங் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி, தனது உடல் நிலை குறித்து கூறியதாவது: பயிற்சியின் போது நான் பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதிக சுமையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் இதற்கு முன்னர் பாதி தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசினேன். ஆனால் நேற்று முன்தினம் 100 சதவீதம் முழு வீச்சில் பந்து வீசினேன்.
இதன் முடிவு நன்றாக இருந்தது. இப்போது 100 சதவீதம் வலிஇல்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் இடம்பெறுவேனா? இல்லையா? என்று எல்லோரும் நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது.
என் மனதில் உள்ள ஒரே விஷயம் என்னவென்றால், நான் உடற்தகுதியுடன் இருக்கிறேன் என்பதையும், ஆஸ்திரேலிய தொடருக்கு நான் எவ்வளவு வலுவாக இருக்கமுடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். களத்தில் அதிகநேரம் செலவிடும் வகையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். இவ்வாறு முகமது ஷமி கூறினார்.