தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்து 179 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

0
28

தென்​கொரி​யா​வின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்​தில் பயணி​கள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்​தனர். விமானம் தீப்​பிடித்து முழு​மையாக எரிந்து நாசமானது. அதன் பின்​பகு​தி​யில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்​கா​யங்​களுடன் மீட்​கப்​பட்​டனர்.

தென்​கொரி​யா​வின் மிகப்​பெரிய விமான சேவை நிறு​வனமான ஜேஜு ஏர் கோ நிறு​வனத்​தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து நேற்று அதிகாலை தென்​கொரி​யா​வின் முவான் நகருக்கு புறப்​பட்​டது. விமானத்​தில் 175 பயணி​கள், விமானிகள் உட்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் இருந்​தனர்.

இந்திய நேரப்படி காலை 9 மணி அளவில் முவான் சர்வதேச விமான நிலை​யத்​தில் தரையிறங்க முயன்​றது. அப்போது, விமானத்​தின் லேண்​டிங் கியர் (சக்​கரங்​கள்) செயல்​பட​வில்லை. இதைத் தொடர்ந்து, விமானம் மீண்​டும் மேலெழுந்து பறந்து, விமான நிலை​யத்தை சுற்றி வட்டமடித்​தது. பின்னர், அவசரகால நடைமுறைப்​படி, விமானத்​தின் அடிப்​பகுதி தரையில் படும் விதமாக ‘பெல்லி லேண்​டிங்’ முறை​யில் தரையிறக்க முடிவு செய்​யப்​பட்​டது.

ஓடுபாதை​யில் விமானத்​தின் அடிப்​பகுதி உரசி​யபடி சென்ற நிலை​யில், திடீரென ஓடுபாதை​யில் இருந்து விலகிய விமானம் பலத்த வேகத்​தில் சுற்றுச்​சுவரில் மோதி​யது. இதில் விமானம் தீப்​பிடித்து முழு​மையாக எரிந்​தது. இந்த விபத்​தில் 179 பேர் உயிரிழந்​தனர். விமானத்​தின் பின் பகுதி​யில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்கா​யங்​களுடன் மீட்​கப்​பட்​டனர்.

உயிரிழந்தவர்களில் பலர் முவான் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தெரிய​வந்​துள்ளது. இதுகுறித்து தென்​கொரிய விமான போக்கு​வரத்து துறை அதிகாரிகள் கூறிய​தாவது: விமானம் தரையிறங்​கும்​போது பறவைகள் மோதி​யுள்ளன. இதனால், லேண்​டிங் கியரில் கோளாறு ஏற்பட்​டிருக்​கும் என்று சந்தேகிக்​கிறோம். தரையிறங்​கிய​போது இன்ஜின் பகுதி​யில் தீப்​பிடித்​த​தாக​வும் சிலர் கூறுகின்​றனர்.

இதுகுறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்​தின் கருப்பு பெட்​டிகள் மீட்​கப்​பட்​டுள்ளன. தீயணைப்பு வீரர்​கள், போலீஸ் அதிகாரி​கள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 1,560 பேர் மீட்பு பணியில் ஈடுபட்​டனர். 32 தீயணைப்பு வாகனங்கள் பயன்​படுத்​தப்​பட்டன. 43 நிமிடங்​களுக்கு பிறகு தீ முழு​மையாக அணைக்​கப்​பட்டது. 2 ஊழியர்கள் தவிர, விமானத்​தில் பயணம் செய்த மற்ற அனைவரும் உயிரிழந்​து​ விட்​டனர். இறந்​த​தில் 2 பேர் தாய்​லாந்தை சேர்ந்​தவர்​கள். மற்றவர்கள் தென்​கொரி​யாவை சேர்ந்​தவர்​கள். 83 பெண்கள் உயிரிழந்​துள்ளனர். உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் தீயில் கருகி உள்ளன.
விமானத்​துக்கு காப்​பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பில்​லியன் டாலர் (ரூ.8,500 கோடி) இழப்​பீடு கிடைக்​கும். இந்த தொகையை பயணி​களின் குடும்​பங்​களுக்கு பகிர்ந்து வழங்க ஜேஜு நிறு​வனம் உறுதி அளித்​திருக்​கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயிரிழந்த பயணி​களின் குடும்​பங்​களுக்கு தேவையான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும் என்று ஜேஜு விமான சேவைநிறுவன தலைவர் கிம் இ பே தெரி​வித்​துள்ளார். விபத்​தில் உயிர் தப்பிய 2 ஊழியர்கள் மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

இந்தியா இரங்கல்: தென்​கொரி​யா​வுக்கான இந்திய தூதர் அமித் குமார் வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், ‘விமான விபத்​தில்​ பலர் உயிரிழந்​திருப்பது மிகுந்த வேதனை அளிக்​கிறது. அவர்​களது குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி​வித்​துக் ​கொள்​கிறோம்’ என்று கூறி​யுள்​ளார். அமெரிக்கா, பிரிட்​டன், ஜெர்​மனி, பிரான்ஸ் உட்பட பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களும் ​விமான ​விபத்​து குறித்​து வேதனை தெரி​வித்​துள்​ளனர்​.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமா?- பாதுகாப்பு குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் ஏர்லைன்ஸ் நியூஸ் சமூக ஊடக ஆசிரியர் ஜெப்ரே தாமஸ் கூறும்போது, “பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் நுரை தெளித்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே விபத்துக்கு காரணம்” என்றார். “பறவை மோதி சக்கரம் செயலிழந்ததாக கேள்விப்பட்டதே இல்லை” என்று ஜெப்ரே டெல் என்ற நிபுணர் கூறினார். “தரையிறங்கியதும் விமானத்தின் வேகத்தை குறைக்காதது தவறு” என்று டெரவர் ஜென்சன் என்ற வல்லுநர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here