சிக்கிம் மாநிலம் சாமர்டங் பகுதியில் ‘டீஸ்டா ஸ்டேஜ் VI’ நீர்மின் திட்டப் பணிகளுக்காக படேல் இன்ஜினியரிங் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:09 மணியளவில், வழக்கம் போல் சுரங்கப்பாதையைத் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது பாறைகளுக்குள் அடைபட்டிருந்த மீத்தேன் வாயு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த எதிர்பாராத விபத்தில் இதுவரை 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 18-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சுரங்கப்பாதையில் மீத்தேன் வாயு கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. சுமார் 4 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று சிறிய அளவில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டது. அதில் சில தொழிலாளர்களின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அப்போது தொழிலாளர்கள் யாரும் உள்ளே சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.















