சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா – பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்த கிராமத்தில் அவர்கள் சொல்வது தான் சட்டம். தனி அரசாங்கமே நடத்தி வந்த மாவோயிஸ்டுகளை மீறி கிராம மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கிராமத்தில் இருந்து கொண்டே பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன. எனினும், திடீர் திடீரென அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கான திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து அவர்கள் விலகினர்.
இந்நிலையில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள புவாரி கிராமத்தில் நேற்று முதல் முறையாக தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. மேலும், போலீஸ் கண்காணிப்பு சாவடிகளும் அமைக்கப்பட்டன. ஒரு காலத்தில் இந்த கிராமத்துக்குள் போலீஸார் செல்லவே அஞ்சினர். தற்போது கிராமத்துக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், மாவோயிஸ்டுகள் மன உறுதி குலையும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டு இயக்கத்தில் உள்ளவர்களின் குடும்பத்தாரை சந்தித்து சுக்மா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பேசி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘வீடு, நிலம், பள்ளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். மாவோயிஸ்டு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால், கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் கிராம மக்களுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும். கிராமம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியம்’’ என்றார்.