கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முன் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராத உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவித்தது.
கடந்த பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் தொகை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் இந்த துயர முடிவை எடுக்க நேர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை 2022 ஏப்ரல் 14-ல் காங்கிரஸ் கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா தலைமையில், பெங்களூருவில் ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சித்தராமையா, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உட்பட நான்கு தலைவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்தது மட்டுமின்றி அவர்கள் மார்ச் 6-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்தராமையா, சுர்ஜேவாலா, எம்பி., பாட்டீல், ராமலிங்க ரெட்டி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ரூ.10,000 அபராதம், மார்ச் 6-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கர்நாடக அரசு, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.